கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இஸ்ரோ மையத்தில் வைத்து இன்று மோடி நாட்டு மக்களுக்கு உரை!

ஆசிரியர் - Admin
இஸ்ரோ மையத்தில் வைத்து இன்று மோடி நாட்டு மக்களுக்கு உரை!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக மனிதன் நிலவில் காலடி வைத்தது, மனிதகுல வரலாற்றின் மகத்தான சாதனையாக கருதப்படுகிறது. வல்லரசான அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடர்ந்து இந்தியாவும் நிலவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) விஞ்ஞானிகள் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணுக்கு அனுப்பினார்கள். அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வந்து நிலவை பற்றி சில தகவல்களை அனுப்பியது. அடுத்த கட்டமாக நிலவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்ய தீர்மானித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தார்கள். இதற்கான திட்ட செலவு ரூ.978 கோடி ஆகும். ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் என்ற மூன்று பகுதிகளை கொண்டதுதான் சந்திரயான்-2 விண்கலம்.

இந்த விண்கலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட தூரம் சென்றதும் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்தது. அவ்வப்போது அதன் சுற்றுவட்ட பாதை மாற்றி அமைக்கப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி விண்கலம், நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றுவட்ட பாதையில் உயரம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலம் நிலவுக்கு அருகே சென்றபடி நீள் வட்ட பாதையில் சுற்றி வந்தது. அதன்பிறகு கடந்த 2-ந் தேதி 1,471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. அதன்பிறகு விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை இரு முறை மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து அது நிலவுக்கு அருகாமையில் சென்றது. அது கடைசி கட்டமாக நிலவுக்கு அருகில் குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 101 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றி வந்தது.

அதற்கு சற்று தொலைவில் ஆர்பிட்டர் தனியாக நிலவை சுற்றி வருகிறது. விக்ரம் லேண்டரை இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் தரை இறக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் செய்து இருந்தனர். நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதள பரப்பில் மெதுவாக தரை இறக்க முடிவு செய்யப்பட்டது. இப்படி தரை இறக்குவதுதான் இந்த திட்டத்தின் உச்சக்கட்ட நிகழ்வு. மேலும் இது மிகவும் சவாலான பணி ஆகும்.

நிலவின் ஈர்ப்பு விசையால் விக்ரம் லேண்டர் வேகமாக கீழ்நோக்கி வந்து சந்திரனில் இறங்கினால் அது சேதம் அடையவோ அல்லது கவிழ்ந்து விடவோ வாய்ப்பு உள்ளது. இதை தவிர்ப்பதற்காக விக்ரம் லேண்டரில் உள்ள உந்துவிசை மோட்டாரை தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் இயக்குவதன் மூலம், அது மெதுவாக தரை இறங்கும். 48 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தரையை தொட இருக்கிறது. அது தரை இறங்கிய 3 மணி நேரம் கழித்து 27 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் வாகனம் விக்ரம் லேண்டரில் இருந்து மெதுவாக வெளியேறும்.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், “விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதை காண நாங்கள் ஆவலுடன் காத்து இருக்கிறோம், திட்டமிட்டபடி எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. இரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும். அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் அதில் இருந்து பிரக்யான் ஆய்வு வாகனம் வெளியேறி தரை பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும்” என்றார். இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், தொலையுணர்வு கருவிகள், கம்ப்யூட்டர்கள், சமிக்ஞை கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும், குழந்தையை தொட்டிலில் போடுவது போல் விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக தரை இறங்கும் என்றும் தெரிவித்தார்.

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்குவதை காண இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி 130 கோடி இந்தியர்களும் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஒட்டுமொத்த இந்தியர்களின் பார்வையும் நிலவை நோக்கியே இருந்தது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை விஞ்ஞானிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து பார்ப்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு பெங்களூரு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்றார்.

பெங்களூரு புறப்படும் முன் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவது பற்றி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்திய விண்வெளி திட்ட வரலாற்றில் இது ஒரு அபூர்வ நிகழ்வு என்றும், இதற்காக 130 கோடி இந்தியர்களும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் என்றும், சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி இந்தியர்களுக்கு பயன் அளிக்கக்கூடியதாக அமையும் என்றும் கூறி இருந்தார். இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் இளைஞர்களுடன் அமர்ந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதை காண்பது குறித்தும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. எனவே இந்தத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர் இன்னும் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆர்பிட்டரை வைத்து நிலவில் 95 சதவிகிதம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பின்னர் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், “லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “இந்தியா, நமது விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறது! அவர்கள் எப்போதும் சிறந்ததையே வழங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போது தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாம் தைரியமாக இருப்போம்! சந்திரயான் -2 குறித்த தகவல்களை இஸ்ரோ தலைவர் வழங்கியுள்ளார். நாம் நம்பிக்கையுடன் இருப்போம், நமது விண்வெளி திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் வருகை தர உள்ளார். இன்று காலை 8 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Radio
×