கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பிறந்து 6 நாட்களே ஆன கைக்குழந்தையை கைப்பையில் மறைத்து கொண்டு சென்ற பெண்!

ஆசிரியர் - Admin
பிறந்து 6 நாட்களே ஆன கைக்குழந்தையை கைப்பையில் மறைத்து கொண்டு சென்ற பெண்!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள விமான நிலையத்தில், கைப்பையில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட பிறந்து 6 நாட்களே ஆன கைக்குழந்தையை அதிகாரிகள் மீட்டனர். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் உடைமைகளில் போதைப்பொருள், அரியவகை உயிரினங்கள் போன்றவற்றை மறைத்து வைத்து கடத்திச் செல்வது வழக்கம். 

ஆனால் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவிலுள்ள விமான நிலையத்தில், பயணிகளின் உடமைகளை சோதித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமெரிக்க பெண் ஒருவரின் உடமையை சோதனையிட்ட அதிகாரிகள், பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தைக்கான எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்காத அந்த பெண், தான் தோளில் மாட்டியிருந்த சற்றே பெரிதான கைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தையை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து குழந்தையை மீட்ட அதிகாரிகள், ஜெனிபர் டாபோல்ட் என்ற அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் குழந்தைக்கு உறவினர் எனவும், அதனை நிரூபிக்க தம்மிடம் ஆவணங்கள் இல்லை எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த குழந்தைகள் பெற்றோர் அல்லாத பிறருடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டுமானால், பெற்றோரின் கைப்பட எழுதிய ஒப்புதல் கடிதம் அல்லது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். எவ்வித ஆவணங்களும் இல்லாத அந்த குழந்தை எந்த நாட்டை சேர்ந்தது என்பதும் தெரியாததால் அதனை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், அந்த பெண்ணை தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

Radio
×