SuperTopAds

திகார் சிறையில் நாட்களைத் தொடங்கிய ப.சிதம்பரம்..!

ஆசிரியர் - Admin
திகார் சிறையில் நாட்களைத் தொடங்கிய ப.சிதம்பரம்..!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேற்கத்திய கழிவறையுடன் தனி அறை வழங்கப்பட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அவருக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அங்கிருந்து திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ப.சிதம்பரம், மருத்துவ சோதனைகளுக்குப் பின் அமலாக்கத்துறை வழக்கு கைதிகளுக்கான 7-ஆம் எண் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவர் தனது கண்ணாடியையும், அத்தியாவசிய மருந்துகளையும் எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு தனி அறையும் மேற்கத்திய கழிவறை வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்செயல் நிகழ்வாக கடந்த ஆண்டு கார்த்திக் சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்த அதே சிறை அறை சிதம்பரத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் சிறைக்கு கொண்டுவரப்படுவதை முன்கூட்டியே உணர்ந்த சிறை நிர்வாகம் முன்னதாகவே சிறை அறையை தயார் செய்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் குறைவான உணவு உட்கொண்டு தனது சிறை நாட்களைத் தொடங்கியதாகவும் நேற்றிரவு அவர் ரொட்டி, பருப்பு, காய்கறிகள், சிறிதளவு சோறு உண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சிறைவாசிகளைப் போல சிதம்பரமும் நூலகத்துக்குச் செல்ல முடியும் என்றும், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் தொலைக்காட்சி பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.