SuperTopAds

27 குளம்-கிணறுகளை காணவில்லை: வடிவேலு பாணியில் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிரியர் - Admin
27 குளம்-கிணறுகளை காணவில்லை: வடிவேலு பாணியில் நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணவில்லை என்று போலீசில் புகார் அளிப்பார். கலகலப்பான அந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் வடிவேலு பாணியில் குளம்- கிணறுகளை காணவில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த தங்கவேலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- நீர்நிலைகளை அதன் பழைய நிலைக்கே மீட்டெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு காணாமல் போன நீர்நிலைகளை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர், ‘வழக்கு குறித்து வருகிற 26-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர், கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.