சஜித் பக்கம் சாயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு இன்னமும் முடிவு செய்யாத நிலையில், கூட்டமைப்பு எம்.பிக்கள் பகிரங்கமாக சஜித் ஆதரவு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
“சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்.
எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடு என்பதால் பல கலாசாரங்களை பின்பற்றக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதனால் நாட்டில் இருக்கும் பிரதான நான்கு மதங்களின் கலாசார அமைப்புக்களுக்கும் மத்திய சலாசார நிதியத்தின் நிதி பகிரப்படவேண்டும்.
கடந்த காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை காணக்கூடியதாக இருக்கவில்லை. அத்துடன் பல கலாசாரங்களை பின்பற்றும் எமது நாட்டில் ஒருசாரால் மற்றுமொரு இனத்தவரின் கலாசாரம் அவமதிக்கப்படும் பட்சத்தில்தான் இன, மத பிரச்சினைகள் இன நல்லிணக்கத்துக்கான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறான நிலைமைகளை கடந்த காலங்களில் எமது நாட்டில் நாங்கள் கண்டிருக்கின்றோம். அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீநேசன் நேற்று சபையில் உரையாற்றிய போது, தமிழர்களது அரசியல் பிரச்சினையை வைத்து அரசியல் மேற்கொள்ளாது அதற்கான உரிய தீர்வினை முன்வைக்க அமைச்சர் சஜித் பிரேமதாஸ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
'எதிர்காலத்தில் தலைமைத்துவத்தை அமைச்சர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமிழர் விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் . இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்தித்த நிலையில், எதிர்வரும் காலங்களில் யுத்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை முன்னேற்றவும் கலாசார நிலையங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளை உருவாக்கவும் சஜித் பிரேமதாச நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் .
மேலும், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழரின் இனப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தி வந்தனரே தவிர இப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவில்லை எனத் தெரிவித்த ஸ்ரீநேசன், சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.