கலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து: 33 பேர் பலி?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் சன்டாகுரூஸ் என்ற தீவு உள்ளது. இந்த தீவை சுற்றிலும் அழகிய கடல் பரப்பு அமைந்துள்ளதால் கடலில் அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க பலர் சிறு படகுகளில் வந்து கடலில் உள்ள அழகை கண்டுகழித்து செல்கின்றனர். அவர்கள் கடலின் அடி ஆழத்தில்மூழ்கி செய்யப்படும் ஸ்கூபா டைவிங் எனப்படும் நீச்சல் முறையில் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையில், சன்டாகுரூஸ் தீவு பகுதியில் உள்ள கடலில் ஸ்கூபா டைவிங் நீச்சல் செய்வதற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பணியாளர்கள் உள்பட மொத்தம் 38 பேர் கொண்ட குழு ஒன்று சன்டாகுரூஸ் தீவில் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு படகில் சென்றனர்.
இந்நிலையில், நீச்சல் குழுவினர் இன்று சன்டாகுரூஸ் தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த தங்கள் படகில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகில் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடலோரக்காவல் படையினர் சம்பவ இடம் விரைந்து படகில் பரவிய தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.
மேலும் படகில் சிக்கிய 5 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் சிக்கிய மேலும் 33 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுக்கிறது. மேலும், படகில் பற்றியுள்ள தீயை அணைக்க மீட்புக்குழுவினர் போராடிவருகின்றனர்.