SuperTopAds

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

ஆசிரியர் - Admin
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பினார்கள்.

3840 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 முதலில் புவி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பிறகு கடந்த மாதம் 14-ந் தேதி சந்திரயான்-2 சுற்றுப்பாதையை மாற்றும் பணி தொடங்கியது. 6 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 20-ந்தேதி அது நிலவின் நீள் வட்ட சுற்றுப் பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிலவின் நீள் வட்டப்பாதையை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீள் வட்ட சுற்றுப் பாதையின் தூரம் குறைக்கப்பட்டால் தான் சந்திரயான்-2 விண்கலத்தால் நிலவை நெருங்க முடியும். மொத்தம் 5 தடவை நீள்வட்ட சுற்றுப்பாதை குறைப்புக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக 4 தடவை சந்திரயான்-2ன் சுற்றுப்பாதை அளவு குறைக்கப்பட்டது. நேற்று மாலை 6.21 மணிக்கு 5-வது முறையாக இறுதிக்கட்டமாக நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை குறைப்பு நிகழ்வு நடந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜினை 52 வினாடிகள் இயக்கி அதை நிலா அருகில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நகர்த்தினார்கள். நீள்வட்ட பாதை குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தது.

இதன்மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று நிலா அருகில் சென்றுள்ளது. தற்போது சந்திரயான்-2 விண்கலம், நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) மதியம் நடந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தரைதளத்தில் இருந்து கொண்டே சந்திரயானில் இருந்து லேண்டரை பிரித்தனர். மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை இந்த பணி நடந்தது.

லேண்டரை பிரிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தற்போது லேண்டர் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அது மிகவும் நல்ல நிலையில் உள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறு நாளும் சந்திரயான்-2 விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையை மேலும் குறைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரையும் நாளை மறுநாள் மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் இந்த பணி நடைபெறும். இதன் மூலம் குறைந்தபட்சம் 36 கி.மீ. தொலைவு கொண்ட நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-2 வந்து விடும்.

36 கி.மீ. தூரத்தில் இருந்தபடி நிலவில் லேண்டரை தரை இறக்க அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் 5 மற்றும் 6-ந்தேதிகளில் வெற்றிகரகமாக செய்து முடிக்கப்படும்.

7-ந்தேதி (சனிக்கிழமை) நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரை இறக்கும் பணிகள் நடத்தப்படும். அன்று அதிகாலை 1.40 மணிக்கு லேண்டர் மெல்ல, மெல்ல நிலாவின் மேற்பரப்பு நோக்கி நகர்த்தப்படும். அடுத்த 15 நிமிடங்களில் நிலவின் மேற்பரப்பை லேண்டர் தொட்டு விடும்.

அதாவது 1.55 மணிக்கு நிலாவில் லேண்டர் தரை இறங்கி விடும். முன்னதாக லேண்டரில் இருந்து ஆர்பிட்டர் என்ற கருவி தனியாக பிரித்து விடப்படும். ஆர் பிட்டர் கருவி தொடர்ந்து நிலாவை சுற்றி வந்து கொண்டே இருக்கும்.

7-ந்தேதி காலை நிலாவில் லேண்டர் தரை இறங்கிய பிறகு அதனுள் இருந்து ரோவர் எனும் 6 சக்கர வாகனத்தை வெளியில் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது லேண்டர் தரை இறங்கிய 3 மணி 15 நிமிடங்களுக்குப் பிறகு ரோவர் வெளியில் வரும். குறிப்பாக 7-ந்தேதி காலை 5.30 மணிக்கு ரோவர் 6 சக்கர வாகனம் நிலாவை தொடும்.

இதையடுத்து நிலாவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கும். ரோவர் 6 சக்கர வாகனமும், லேண்டர் அமைப்பும் மொத்தம் 14 நாட்களுக்கு தங்களிடம் உள்ள கருவிகள் மூலம் ஆய்வு பணிகளை செய்யும்.

லேண்டர் அமைப்பு நிலவின் எந்த இடத்தில் தரை இறங்கியதோ, அதே இடத்தில் 14 நாட்களும் நின்றபடி ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக லேண்டர் அமைப்புக்குள் 3 அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த மூன்று அதிநவீன கருவிகளும் நிலவின் மேற்பரப்பை ஆய்வுகள் செய்து படம் பிடித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல்களைத் தரும். இதன்மூலம் நிலவின் மேற்பரப்பை விஞ்ஞானிகள் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

லேண்டர் அமைப்பு நின்ற இடத்தில் நின்றபடி ஆய்வு செய்யும் நிலையில் அதனுள் இருந்து வெளிவரும் ரோவர் 6 சக்கர வாகனம் மட்டும் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் நிலவின் மேற்பரப்பில் மிக, மிக மெல்லத்தான் ரோவர் வாகனம் நகரும்.

சுமார் 500 மீட்டர் தூரம் நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்லும் ரோவர் வாகனத்துக்குள் 2 அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த 2 கருவிகளும் நிலாவுக்குள் இருக்கும் கனிம வளங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்கும்.

நிலவில் எந்த அளவுக்கு தண்ணீர் உள்ளது? வேறு என்னென்ன கனிமங்கள் இருக்கின்றன என்பதையும் ரோவரில் உள்ள 2 கருவிகளும் கண்டுபிடிக்கும். நிலவின் தரைக்குள் கதிர்களை பாய்ச்சியும் தோண்டி பார்த்தும் ரோவர் கருவிகள் ஆய்வு செய்யும். இது தொடர்பான படங்களையும் ரோவரில் உள்ள 2 கருவிகளும் அனுப்பி வைக்கும்.

இவை அனுப்பும் தகவல்கள், படங்கள் மூலம்தான் நிலவில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா? என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள். எனவே ரோவர் தரும் தகவல்கள் தொடர்பான எதிர்பார்ப்பு இப்போதே உலக விஞ்ஞானிகளிடம் அதிகரித்துள்ளது.

லேண்டரில் உள்ள மூன்று கருவிகளும் ரோவரில் உள்ள இரு கருவிகளும் 14 நாட் களுக்கு மட்டுமே செயல்படும். அத்துடன் அவற்றின் பணிகள் நிறைவு பெற்று விடும். ஆனால் லேண்டரில் இருந்து பிரிக்கப்படும் ஆர்பிட்டர் அமைப்பு மட்டும் நிலாவை சற்று தொலைவில் இருந்தபடி சுற்றி வரும்.

ஆர்பிட்டர் அமைப்புக்குள் 8 அதிநவீன கருவிகள் உள்ளன. சக்தி வாய்ந்த படம் எடுக்கும் கருவியும் உள்ளது. இந்த ஆர்பிட்டர் மட்டும் சுமார் ஓராண்டுக்கு நிலாவை சுற்றி வரும். எனவே அதில் இருந்து சுமார் ஓராண்டுக்கு நிலா பற்றிய தகவல்களை நமது விஞ்ஞானிகள் பெறுவார்கள்.

சந்திரயானில் உள்ள லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் ஆகிய மூன்று அமைப்புகளும் மிக, மிக நல்ல நிலையில் உள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.