பணி ஓய்வுக்கு முன்னர் கடைசி பயணம்- அபிநந்தனுடன் போர் விமானத்தில் பறந்த விமானப்படை தளபதி
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தன் வரத்மானை பாகிஸ்தான் சிறைபிடித்தது.
இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து அவருக்கு ஒரு மாத காலம் விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட அபிநந்தன் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக போர் விமானங்களை இயக்கி வந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்திற்கு இன்று வந்த இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா மிக்-21 ரக போர் விமானத்தில் அபிநந்தன் வரத்மானுடன் பயணம் மேற்கொண்டார்.
இந்திய விமானப்படையில் இருந்து வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ள பிஎஸ் தனோவா தனது கடைசி பயணமாக அபிநந்தனுடன் போர் விமானத்தில் பறந்தார்.
அதிவேகமாக சீறிப்பாய்ந்து சுமார் ஒரு மணிநேரம் வானில் பறந்த விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா பின்னர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
அபிநந்தனுக்கும் எனக்கும் சில பொதுவான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, இருவரும் ஒருசில காரணங்களால் சில நாட்கள் விமானப்படையில் பணி செய்ய முடியாமல் போனது. மேலும், நாங்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு ஏதிராக சண்டையிட்டுள்ளோம். இதை தவிர்த்து மற்றுமொரு பொதுவான விஷயம் என்னவென்றால், அபிநந்தனின் தந்தையுடனும் நான் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
மேலும், 1988-ம் ஆண்டு போர் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் கீழே குதித்ததால் காயமடைந்த நான் சிகிச்சை முடிந்து மீண்டும் முழு உடல் தகுதியுடன் பணியில் சேர எனக்கு 9 மாதங்கள் தேவைப்பட்டது.
ஆனால், அபிநந்தன் வெறும் 6 மாதங்களுக்குள் போர் விமானங்களை ஓட்டுகிறார். அவருடன் மிக்-21 ரக போர் விமானத்தில் இன்று நான் பறந்ததை மிகவும் மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.