காடழித்து காணி பிடித்ததை தட்டிக்கேட்ட ஊடகவியலாளருக்கு நெருக்கடி..! கட்ட பஞ்சாயத்தும் நடத்துகிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா..?

ஆசிரியர் - Editor I
காடழித்து காணி பிடித்ததை தட்டிக்கேட்ட ஊடகவியலாளருக்கு நெருக்கடி..! கட்ட பஞ்சாயத்தும் நடத்துகிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா..?

அரச அலுவலகங்களிற்கே பிரதேச சபையிடம் கட்டட அனுமதி பெறப்படவில்லை. இந்த நிலையில் தனி நபரான ஊடகவியலாளர் ஒருவர் மீது புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டமை 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக நிரூபனமாகியுள்ளது. குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் பல்வேறு தகவல்கள் 

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக கோரப்பட்ட நிலையில் மேற்குறித்த விடயங்கள் வெளிவந்தள்ளன. குறித்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் 2010ம் ஆண்டுமுதல் தற்காலிக கொட்டகையில் வாழ்ந்து வருகின்றார். 

இவர் தமக்கென ஓர் வீட்டினை அமைத்துக்கொண்டிருந்தபோதே இவ்வாறு குறித்த ஊடகவியலாளரிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் 

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்கள் வன அழிப்பு மேற்கொண்டு அரச காணிகளை ஆக்கிரமிக்கின்றமை தொடர்பில் புலனாய்வு செய்தி அறிக்கையிடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் 

பல்வேறு விமர்சனங்கள் அரசியல்வாதிகள் மீது முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரினால் குறித்த ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருந்தார். 

ஊடகவியலாளர் தான் குடியிருக்கும் காணியில் வீடு அமைத்துக்கொண்டிருந்தபோது, வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பிரதான வாயிலை உடைத்து உட்சென்று அங்கிருந்த அவரது தாயாரை அச்சுறுத்தியுள்ளார். 

இதேவேளை தொலைபேசி ஊடாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரை தொடர்புகொண்டும் அச்சுறுத்து உள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை 

இங்கு குறிப்பிடதக்கதாகும். இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகியோரின் அரசியல் அழுத்தம் காரணமாக குறித்த ஊடகவியலாளரால் கட்டப்படும் வீட்டினை 

தடுப்பதற்காக அனுமதியற்ற கட்டடம் அமைக்கப்படுகின்றமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது, இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக 

பல்வேறு விடயங்கள் கோரப்பட்டிருந்தன.குறித்த கோரிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அலுவலகம், ஒலுமடு உப அலுவலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கட்டடம், 

இந்துபுரம் நீர்தாங்கி ஆகியன நிர்மானிப்பதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் அனுமதி பெறப்பட்டதா எனவும், அதற்கான ஆவணங்களையும், வருமான வரி பற்றுச்சீட்டினையும் கோரியிருந்தார். 

மேற்குறித்த அனைத்திற்கும் பிரதேச சபையிடம் அனுமதி பெறப்படவில்லை என குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது, 

இதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் தமது சுய முயற்சியால் கட்டப்பட்ட வீடுகளிற்காக 31 அனுமதிகள் பெற்றுள்ளதாகவும், வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களிற்காக பிரதேச சபையிடம் இதுவரை 233 பேர் அனுமதி பெற்றுள்ளதாகவும் 

குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பத்திற்கமைய தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் வசிக்கும் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 12 விண்ணப்பங்கள் அனுமதிக்காக கிடைத்ததாகவும், 

அவற்றில் நான்கு விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 04.06.2018ம் நாள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட தகவலில் 

குறிப்பிடப்பட்டுள்ள தகவலிற்கமைய குறித்த ஊடகவியலாளர் வசிக்கும் இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 238 வீட்டுத்திட்ட பயனாளிகளிற்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் ஏனையோர் பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை என்பது புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது தவிர்ந்து ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச செயலர் பிரிவுகளையும் இணைத்தே 

புதுக்குடியிருப்பு பிரதேசசபை காணப்படுகின்றது. அவர்களில் ஒட்டு மொத்தமாக 264 வீடுகளிற்கே கட்டட அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது மேல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில், 

குறித்த ஊடகவியலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா தொடர்பில் வெளிக்கொண்டுவந்த காடழிப்பு தொடர்பான செய்தி அறிக்கையிடலின் பின்னர் அவர் மீது இவ்வாறு அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றுள்ளமை உறுதியாகின்றது. 

குறித்த பிரதேச சபகை நிர்வாக எல்லைப்பகுதியில் இதுவரை நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று என்பதையும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 

அரச திணைக்களங்களிற்கே பிரதேச சபையில் அனுமதிகள் பெறப்படாத நிலையில், ஓர் ஊடகவியலாளரை இவ்வாறான நெருக்கடிக்குள் தள்ளி அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் 

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கேள்வி எழுப்புகின்றார். அவ்வாறு அனுமதி பெறப்படாத நிலையில் உள்ள சகல அரச திணைக்களங்களின் பிரதானிகள் மீது வழக்கு தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே மக்கள் பிரதேசசபை 

மீது நம்பிக்கை கொள்ள முடியும் எனவும் கல்வியலார்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு