மீண்டும் வனவள திணைக்களம் அட்டகாசம்..! கேட்பாரற்று வீதிக்குவரும் விவசாயிகள்..
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி விவசாய நிலமான கோட்டைக் கேணிப்பகுதியில் பெரும்போகச் செய்கைக்காக பண்படுத்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவ விவசாயிகளை வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்துள்ளது.
இச் சம்பவம் கடந்த 19.08.2019 இடம் பெற்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தமது விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு வனஜீவராசிகள் திணைக் களம் தடை விதித்துள்ளதால், தமது வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாக வும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக கோட்டைக்கேணியிலிருந்து வெள்ளைக்கல்லடி வரையான சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட, தமது பூர்வீக அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், பணம்போட்ட கேணி, அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்களை இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்துள்ளது.
மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களம், சரணாலயத்திற்குரிய இடமென குறித்த பகுதிகளில் பெயர்ப்பலகை நாட்டி அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்ககைகள், குறித்த விவசாய நிலங்களினுடைய உரிமையாளர்களான எமது அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையினால் நாம் பெரிதும் அதிர்ப்பதிக்குள்ளாகியிருந்தோம். இந் நிலையில் தற்போது நாம் பெரும்போக நெற்செய்கைக்காக, கோட்டைக்கேணிப் பகுதியில் பண்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர், உடனடியாக வேலைகளை நிறுத்தும்படி தடுத்தனர்.
இவ்வாறு எமது வாழ்வாதார நிலங்கள் அபகரிக்கப்படுவதனால், எமது வாழ்வாதராமானது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்தகாலங்களில் 30வருடத்திற்கும் மேலாக நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்து, கடந்த 2011ஆம் ஆண்டு எமது பகுதிகளில் மீளக்குடியமர்ந்த நாம்,
எமது விவசாய நிலங்களினூடாக எமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அதுவும் இப்போது பொய்துத்துவிட்டது. மேலும் எமது குளத்தின் கீழான பல விவசாய நிலங்கள் சிங்களமக்களுக்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தற்போது எமது மானாவாரி விவசாய நிலங்களையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரிப்புச் செய்தால் நாம் எமது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்றனர்.