SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்..! காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகள் காட்டம்.

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்..! காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகள் காட்டம்.

காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படகூடாது. என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளதுடன், திறக்கப்பட்டால் போராட்டம் நடாத்துவோம் எனவும் கூறியுள்ளனா். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் பிராந்திய அலுவலகங்களை திறக்கமாட்டோம் என கூறியிருந்தார். 

இந்த அலுவலகத்தினால் எந்த பலனும் கிடையாது என்பதாலேயே எதிர்த்து வருகிறோம். இந்த நிலையில் வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். 

அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசியல்வாதிகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தினத்தில் வடக்கு, கிழக்கில் போராட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். 

முள்ளிவாய்க்காலில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்திலும், கல்முனையிலும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள், மக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.