அணு ஆயுத பயன்பாடு... மோடி அதிரடி..!

ஆசிரியர் - Admin
அணு ஆயுத பயன்பாடு... மோடி அதிரடி..!

அணு ஆயுதங்களை, இந்தியா, முதலில், பயன்படுத்தாது என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்காலத்தில், என்ன நடைபெறும் என்பது, அப்போதைய சூழலை பொறுத்தது எனக்கூறி, பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், 1974ஆம் ஆண்டு, "சிரிக்கும் புத்தர்" என்ற தலைப்பில், முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில், அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, 1998ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அதே பொக்ரானில், "ஆப்ரேசன் சக்தி" என்ற தலைப்பில், 5 அணுகுண்டு சோதனைகள், 2 நாட்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தாலும், அணு ஆற்றல் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில், இந்தியாவும் பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில், பொக்ரானில் நடைபெற்ற, முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின், முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், இந்தியாவை ஒரு அணுசக்தி மிக்க நாடாக மாற்றுவதற்கான அடல்பிகாரி வாஜ்பாயின் உறுதியான தீர்மானத்திற்கு சாட்சியாக இருந்த பகுதி பொக்ரான் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா அணுஆற்றல் கொண்ட நாடாக மாறினாலும், யுத்தகால சூழலில், முதலில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற கோட்பாட்டில், உறுதியாக இருப்பதாக, ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். இந்த கோட்பாட்டை இந்தியா கண்டிப்பாக கடைபிடிப்பதாக கூறியுள்ள ராஜ்நாத்சிங், எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா ஒரு பொறுப்புள்ள அணு ஆற்றல் கொண்ட நாடு என்ற நிலையை அடைவது தான், நம் நாட்டின், ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையளிக்கும் விஷயமாகும் என்றும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவ்வாறு, பொறுப்புமிக்க அணு ஆற்றல் கொண்ட நாடு என்ற நிலையை ஏற்படுத்திய, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, இந்திய தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் விவகாரத்தை, பன்னாட்டு பிரச்சினையாக மாற்றத் துடிக்கும் பாகிஸ்தான், எல்லையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிட துடிக்கும் சூழலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.