யாழ். இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..? வரலாற்றை மறந்த இனம் வரலாறு படைக்காது..

ஆசிரியர் - Editor I
யாழ். இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..? வரலாற்றை மறந்த இனம் வரலாறு படைக்காது..

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை 7 வீதிகள் கொண்ட பிரமாண்டமான ஆலயமாகக் கட்டியெழுப்பிய வெடியரசன் என்ற சிறந்த தமிழ் மன்னனை தமிழர்கள் மறந்துவிட்டமை வரலாற்றுத் துரோகம்.

 போர்த்துக்கேயரின் கப்பல்களைக் கடலில் வைத்து தகர்த்தெறிந்த பெரும் பலத்துடன் விளங்கியவன் வெடியரசன்.

15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், ஈழத்தில் தமிழ் மன்னர்கள் கோலோச்சிக்கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இராசதானியின் கீழ் சிற்றரசனாக இருந்தவனே விஷ்ணுபுத்திர வெடியரசன் என்ற பலம்பொருந்திய தமிழ் மன்னன்.

யாழ்ப்பாண இராசதானியின் கரையோரப் பகுதிகளை, குறிப்பாக, பொன்னாலை, கீரிமலை, காரைநகர், நெடுந்தீவு ஊர்காவற்றுறை போன்ற கரையோரப் பகுதிகளை இவனும் இவனது சகோதர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இப்போது வலிகாமம் எனக் கூறப்படும் பிரதேசத்தில் வெடியரசனதும் அவனது சகோதரர்களினதும் ஆட்சி பரந்து விரிந்திருந்தது. தொல்புரம், சுழிபுரம், கொட்டியாவத்தை, ஆனைக்கோட்டை போன்ற இடங்களிலும் இவன் சிறு தளங்களை அமைத்திருந்தான் என வரலாறு கூறுகின்றது.

கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது. இதன் நிமித்தம் இவர்கள் பாதுகாப்பு கருதி, காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய இடங்களில் கோட்டைகளை அமைத்திருந்தனர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே நெடுந்தீவு கோட்டையாகும். இவ்விடங்களின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் கோட்டைகளைக் கட்டினர்.

இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான்.

போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது. முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன் பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால் வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு.

அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது.

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பின்னாளில் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு தங்கினர் எனவும் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அவற்றைக் கைப்பற்றினர் எனவும் கூறப்படுகின்றது.

வெடியரசன் வரலாற்றை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். வரலாற்றை மறந்த இனம் வரலாற்றைப் படைக்க முடியாது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு