யார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக ஆட்சிக்கு வந்தாலும் போராட்டம் தொடரும்!
நாட்டில் கோத்தாபய ராஜபக்ச அல்ல, யார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக ஆட்சிக்கு வந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடருமென, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் தலைவிகள் தெரிவித்தனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, எதிர்வரும் 30ஆம் திகதி கல்முனையில் இடம்பெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, திருக்கோவில், தம்பிலுவில் பொது சந்ததைக் கட்டத் தொகுதியில் அமைந்துள்ள அவர்களின் மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி அமலராஜ் அமலநாயகி, இந்த நாட்டில் இனிமேலும் வெள்ளை வான் கலாசாரம், ஆள் கடத்தல்கள், கொலைகள் என்பன இடம்பெறாது தடுப்பதற்காகவே கடந்த பத்து வருடங்களாக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாம் போராடி வருவதாகத் தெரிவித்தார்.
இன, மத, மொழி வேறுபாடு இல்லாமல் தமது போராட்டங்களுக்கு ஒத்துழைப்புகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், திருகோணமலை மாவட்ட சங்கத் தலைவி செல்வராசா சறோஜாதேவி உரையாற்றுகையில், தமது உயிர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் இனந்தெரியாத நபர்கள் செயற்பட்டு வருவதாகவும் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.