வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் வடமாநிலங்கள்.. நான்கே நாட்களில் 87 பேர் உயிரிழப்பு!
அஸ்ஸாம், பீகார், மகாராஷ்ட்ரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் நான்கே நாட்களில் மழை வெள்ளத்திற்கு 87 பேர் உயிரிழந்தனர். மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் கோலாபுர், சங்கலி ஆகிய மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இவ்விரு மாவட்டங்களும் இருளில் மூழ்கியுள்ளன.
மகாராஷ்ட்ராவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் மழையால் அழிந்துவிட்டன. கர்நாடக அரசு அலமட்டி அணையில் இருந்து 5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டால் மகாராஷ்ட்ராவில் வெள்ளம் வடியும் என்பதால், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளம் காரணமாக இதுவரை மழை வெள்ளத்திற்கு 29 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடிக்கிறது.வெள்ளச்சேதப்பகுதிகளைப் பார்வையிட்ட எடியூரப்பா வெள்ள நிவாரணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆந்திராவின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல கரையோர கிராமங்கள் 5வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளன. போலாவரம் உள்ளிட்ட அணைப்பகுதிகளில் வெள்ளம ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
ஆற்றில் தத்தளித்த 31 மீனவர்களை தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். இதே போல் கிருஷ்ணா நதியிலும் நீர்வரத்து மிக அதிகளவில் உள்ளது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து 3 லட்சம் கன அடியைத் தாண்டியது. இதனால் தெலுங்கானா, ஆந்திர அரசுகள் அணைகளில் இருந்து உபரி நீரைத் திறந்துவிட வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அசாம், பீகார் மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடந்த நான்கு நாட்களில் 87க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர்.