குடியிருக்க எனக்கூறி வாங்கிய வீட்டில் கூடாரம் அமைத்து கிறிஸ்தவ போதனை..! பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு..

ஆசிரியர் - Editor I
குடியிருக்க எனக்கூறி வாங்கிய வீட்டில் கூடாரம் அமைத்து கிறிஸ்தவ போதனை..! பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு..

பொன்னாலை - மூளாய் எல்லையில், குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட இந்திய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் அங்கு கிறிஸ்தவ மத போதனை நடத்திவருகின்றார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மூளாய் கம்மானை வீதியில் குடும்பம் ஒன்றுக்கு இந்திய வீட்டுத்திட்ட வீடு வழங்கப்பட்டிருந்தது. குறித்த வீட்டினை அக்குடும்பம் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி வேறிடத்தில் வசிக்கின்றது.

குடியிருப்பதற்கு எனக்கூறி அந்த வீட்டினை வாங்கிய கிறிஸ்தவ சபையின் போதகர் அந்த வீட்டிற்கு முன்பாக பெரும் கூடாரம் ஒன்றை அமைத்துள்ளார். அங்கு கிறிஸ்தவ மத போதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இங்கு தூண்கள் எழுப்பப்பட்டு கூடாரம் அமைப்பதற்கு பிரதேச சபையில் எந்தவித அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

முற்றுமுழுதாக சைவ மக்கள் வாழும் சூழலில், அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வெளி இடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து மதக்கூட்டம் மற்றும் மத போதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள் இன்று (04) இது தொடர்பாக மூளாய் கிராம சேவையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம சேவையாளர் குறித்த மத போதகருடன் கலந்துரையாடினார். இந்த விடயத்தை தான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்வார் என அவர் கூறினார்.

குறித்த வீட்டில் கிறிஸ்தவ மதபோதனைகள் இடம்பெறுவதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள மக்கள், இந்திய வீடு விற்பனை செய்யப்பட்டமைக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். குடாநாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கின்ற நிலையில் இந்திய வீடுகளைப் பெற்றவர்கள் அவற்றை மதமாற்ற சபைகளுக்கு விற்பனை செய்கின்றமை எந்த வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது எனவும் அவர்கள் கேள்ளி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, கிறிஸ்தவ மதபோதனைகள் நடைபெறும் இடங்களுக்கு அனுமதி வழங்குவதாயின் அப்பகுதியில் உள்ள மக்களின் கருத்துக்களை அறியாமல் அனுமதி வழங்க வேண்டாம் என மூளாய் - பொன்னாலை மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முற்றுமுழுதாக சைவ மக்கள் வாழும் சூழலில் கிறிஸ்தவ மத போதனைகள் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள மேற்படி மக்கள், இது திட்டமிட்ட மதமாற்ற செயற்பாடு எனவும் கூறியுள்ளனர். இவ்வாவாறான செயற்பாடுகளை தாங்கள் 

முற்றுமுழுதாக எதிர்ப்பதாகக் கூறியுள்ள அவர்கள், இந்த விடயத்தில் அதிகாரிகள் அதிக சிரத்தை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு