மத போதனைகளைச் செய்வதாயின் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்..! மதமாற்ற கும்பலுக்கு பொலிஸாா் சாட்டை..
மத போதனைகளை நடத்துகின்ற இடம் தொடர்பாக உரிய வகையில் அனுமதி பெறப்பட்டு அந்த நிலையத்தை பதிவுசெய்த பின்னரே அங்கு மதக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை நடத்த முடியும் என வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட இந்திய வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.
இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை வெளியேறுமாறு வற்புறுத்தினர். எனினும், அவர்கள் தொடர்ந்தும் அங்கு மதக் கூட்டம் நடத்தப்படும் எனக் கூறியதால் மக்கள் கடுமையான தொனியில் எச்சரித்து வெளியேற்றினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இச்சம்பவம் இடம்பெற்றது.
இது தொடர்பாக குறித்த கிறிஸ்தவ சபையின் போதகர், பொன்னாலையைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ந.பொன்ராசா மற்றும் செ.றதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
றதீஸ்வரன் தன்னைத் தாக்க முற்பட்டார் எனவும் பொன்ராசா ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பரப்பிவிட்டார் எனவும் இதனால் தங்களுக்கு அவமானம் நேர்ந்தவிட்டது எனவும் போதகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று (30) செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், பொலில் பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை இடம்பெற்றது.
இதன்போது, எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை இருக்கின்றது எனக் கூறிய பொலிஸ் பொறுப்பதிகாரி, மத போதனை செய்தவர்களுடன் முரண்பட்டமை தவறான செயல் எனக் கூறினார்.
தமது பிரதேசம் சைவக் கிராமம் என்பதைச் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கிறிஸ்தவ சபைகளின் மதமாற்றச் செயற்பாடுகளை மக்கள் விரும்பவில்லை எனக் கூறினர்.
மதம் மாற்றும் சபைகளின் செயற்பாடுகளை மக்கள் விரும்பாவிட்டால் உரிய சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார்.
கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம்
என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். சபைக்குரிய அனுமதி இருக்கின்ற போதிலும், பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்துவதாயின்
அதற்குரிய அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளைப் பெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறினார். பொன்னாலை மக்கள் கிறிஸ்தவ மதமாற்றச் செயற்பாடுகளை மக்கள் விரும்பவில்லை எனக் கூறிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,
உரிய சட்டத்தின் அடிப்படையில் தாங்கள் அதைத் தடுப்பார்கள் எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்தனர்.