நிதிச் சட்டங்களிலுள்ள 'ஓட்டை' வழியாக மட்டு. பல்கலைக்கு நிதி!

நிதிச் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தியே மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அந்நிய செலாவணி சட்டத்தில் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் காரணமாக மட்டக்களப்பு பல்கலைக்கழத்துக்கு இடம்பெற்ற வெளிநாட்டு பண பரிமாற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய முடியாது போனது என்று வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கண்காணிப்புத் துறை பணிப்பாளர் ஆர்.ஆர். ஜயரட்ண தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று வாக்குமூலமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு பல்கலைக்கு நிதி பரிமாற்றங்கள் எவ்வாறு இடம்பெற்றதென இதன்போது மத்திய வங்கியின் குழுவினர் தகவல்களை சமர்ப்பித்ததுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களின் கணக்குகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
வெளிநாட்டு வருவாய் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக பெற்றி பல்கலைக்கு இடம்பெற்ற வெளிநாட்டு பண பரிமாற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய முடியாது போனது . புதிய வருவாய் சட்டத்தின் பிரகாரம் அதில் தவறு என்ற வார்த்தை எங்கும் இடம்பெறவில்லை.
வருவாய் சட்டம் தயாரிக்கப்பட்ட போது மத்திய வங்கியுடன் கலந்துரையாடவில்லை. இறுதி தருணத்திலேயே திருத்தங்கள் கோரப்பட்டிருந்தன. நாங்களும் சில திருத்தங்களை முன்வைத்திருந்தோம். மட்டக்களப்பு பல்கலைக்கு இவ்வாறு பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதென உரிய தரவுகளை அந்நிய வருவாய் திணைக்களத்துக்கு வழங்குவதில் தவறிழைக்கப்பட்டு விட்டது என்றும் அவர் கூறினார்.