ரூ.2.76 கோடி கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!

ஆசிரியர் - Admin
ரூ.2.76 கோடி கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்ராவ் மற்றும் போலீசார் குப்பம் அடுத்த விஜிலாபுரம் கிராமத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அங்கு சுதாகர்ரெட்டியின் பெட்டிகடை அருகே 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த கைப்பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் கத்தை கத்தையாக கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவர்களை பிடித்து விசாரித்த போது கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் இடத்தை தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு அவர்களை அழைத்து சென்றனர்.

குப்பம் அடுத்த சாமகுட்டபள்ளி பகுதியில் கள்ள ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்கும் வீட்டை சுற்றி வளைத்து போலீசார் வீட்டிற்குள் சென்றனர். அங்கு 4 பேர் கும்பல் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மர்தேபள்ளி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (23). எலத்தகிரி பகுதியை சேர்ந்த குபேந்திரன் (50). மற்றவர்கள் குப்பம் அருகே சாமகுட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (33). திருப்பதி வித்யாநகரை சேர்ந்த சுரேஷ்ரெட்டி (31). அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹேமந்த் (26). என்பது தெரியவந்தது.

இந்த 6 பேரும் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து தமிழகம் மற்றும் ஆந்திராவில் புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் கைது செய்யபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 2 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள், 3 கம்யூட்டர்கள், 2 மடிக்கணினிகள், மற்றும் ஸ்கேனிங் கருவி, பிரிண்டிங் மிஷின், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த கும்பல் 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்தும், ஜெராக்ஸ் எடுத்தும் அதன் மேல் ஆர்.பி.ஐ. ஸ்டிக்கரை ஒட்டி கள்ள ரூபாய் நோட்டுகளை பெட்டிக்கடை, பெரிய வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட்டுகளில் புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் வாங்கினால், அதற்கு 10 ஆயிரம் கமி‌ஷன் கொடுத்துள்ளனர். கைதான 6 பேரும் ரகசிய இடத்தில் வைக்கபட்டு விசாரணை நடத்தபடுகிறது. அவர்கள் யார் யாரிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள், இதில் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ள நோட்டு கும்பல் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.