எகிப்து செல்லும் விமான சேவைகளை ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்!
எகிப்தின் தலைநகர் கெய்ரோ செல்லும் விமானங்களை ஒரு வாரம் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விமானங்களை ரத்து செய்வதற்கான சரியான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்காத போதிலும், உலக முழுவதும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து, லுப்தான்ஸா விமான நிறுவனமும், கெய்ரோ செல்லும் விமானங்களை நேற்று ரத்து செய்திருந்தது. இருப்பினும், இன்று அந்நிறுவனம் விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனிடையே, பயணிகளின் சிரமங்களை சந்திப்பதை தவிர்க்க, கெய்ரோவிலிருந்து லண்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு, அதிக எண்ணிக்கையில் விமான சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என எகிப்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.