யாழ்.மாவட்டத்தில் நலன்புாி நிலையங்களில் வாழும் சொந்த காணி அற்ற மக்களுக்கு காணியும், வீடும்..! பிரதமா் நடவடிக்கை..
யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புாி நிலையங்களிலு் வாழும் 381 காணி அற்ற குடும்பங்களை மீள்குடியேற்றவதற்காக காணி கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்குமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்
என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் அரிதாகவுள்ளமையினால் தனியார் காணிகளை ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச்சஸ் என்ற அடிப்படையில்
நலன்புரி நிலையங்களிலுள்ள காணியற்ற 381 குடுபம்பங்களுக்கு காணிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலுள்ள காணிகள் அற்ற 50 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக
காணிகளை கொள்வனவுசெய்வதற்கு 35 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் 10 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4 ஆயிரத்து 750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டு
முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 500 வீடுகளும், கிளிநொச்சியில் 670 வீடுகளும்,
முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும் மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும்
மன்னாரில் 350 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு ,அமைக்கப்படுகின்றன.
இரண்டாம் கட்டமான 5 ஆயிரத்து 250 வீடுகளில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 65 வீடுகளும், கிளிநொச்சியில் 855 வீடுகளும்,
முல்லைத்தீவில் 695 வீடுகளும், மன்னாரில் 850 வீடுகளும், வவுனியாவில் 550 வீடுகளும், திருகோணமலையில் 600 வீடுகளும் நிர்மாணிக்கப்பட உள்ளன.
அவை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் முடிவுறுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்கான 7 ஆயிரம் சிறப்பு வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக ஆயிரம் புதிய
தொழில்நுட்ப வீடுகளும் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.