SuperTopAds

இந்து மத தலைவா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்பட்ட விவகாரம்..! வலி,மேற்கு பிரதேசசபையில் கண்ட தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
இந்து மத தலைவா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்பட்ட விவகாரம்..! வலி,மேற்கு பிரதேசசபையில் கண்ட தீா்மானம்..

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு வலி.மேற்கு பிரதேச சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது 

தேநீர் சாயம் ஊற்றித் தாக்குதல் நடத்தியமையும் மோசமான அநாகரிகமான செயற்பாடு எனத் தெரிவித்துள்ள பிரதேச சபை அதற்கும் வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபையின் 17 ஆவது சாதாரண பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (19) பிரதேச சபையில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோது, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அராஜகம் தொடர்பாக 

உறுப்பினர் ந.பொன்ராசா கண்டனப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். அப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர் பொன்ராசா பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் அரங்கேற்றப்படுகின்றது. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சைவத்தமிழர்களின் வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இதன் உச்சமாக கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மீது சிங்களக் காடையன் ஒருவனால் தேநீர்ச் சாயம் ஊற்றப்பட்ட அநாகரிகம் இடம்பெற்றுள்ளது. 

சிறிலங்காவில் மிக மோசமான ஆட்சி நடைபெறுகின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. ஆயுதப் போராட்டம் இடம்பெற்றபோது, தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட சிங்கள தேசம், 

அதற்காகப் புலிகளோடு பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனவும் கூறியது. புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை எனவும் அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் சர்வதேசம் பூராகப் பிரச்சாரம் செய்து வந்தது. 

அதன் அடிப்படையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட அரசு 

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் தமிழர் தாயகத்தை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 

தமிழ் சிங்கள மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியிடம் கையளிக்கவேண்டிய தொல்லியல் திணைக்களம் முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

வவுனியா வெடுக்குநாறிமலைப் பிரதேசத்தை ஆக்கிரமித்து அங்கு பௌத்த விகாரை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. 

கன்னியாயில் பிள்ளையார் ஆலயத்தை அப்புறப்படுத்திவிட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வலிகாமம் வடக்கில் ஏற்கனவே சிறிய விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தையிட்டியில் பாரிய விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. 

நாவற்குழியில் பாரிய விகாரை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. நயினாதீவில் 60 அடி உயரத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது. இதேபோல தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் விகாரைகள் அமைத்து எமது பூர்வீக நிலத்தை 

சிங்கள மயப்படுத்தும் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது. திருகோணமலை தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம். இங்குள்ள கன்னியாயில் தமிழர் மரபுரிமையை நிலைநாட்டும் நோக்கத்துடன் தமிழ் மக்கள் இணைந்து கன்னியாய் பிள்ளையார் 

ஆலயத்தில் வழிபாட்டுக்குச் சென்றபோது, அதற்குத் தலைமை தாங்கிய தென்கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் மீது சிங்களக் காடையன் ஒருவனால் தேநீர்ச் சாயம் ஊற்றப்பட்டுள்ளது. மிகக் கேவலமான இந்தச் செயல் ஒட்டுமொத்த 

சைவத் தமிழ் மக்களையும் கொதிப்படைய வைத்துள்ளது. பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட வணக்கத்திற்குரிய மதகுரு ஒருவர் மீது அநாகரிகம் இடம்பெற்றபோது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தனர். 

குறித்த நபரைக் கைது செய்ய முடியவில்லை. பொலிஸாரின் இந்தச் செயற்பாடானது நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு வேறோரு நீதியா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. 

பௌத்த பிக்கு ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாக்கப்பட்டிருந்தால் பொலிஸார் பார்த்துக்கொண்டிருப்பார்களா என தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 30 வருட யுத்தத்திற்கு பின்னரும் சிங்கள தேசம் சிங்கள தேசம் 

நல்லிணக்கத்திற்கு தயாராக இல்லை என்பதையே தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சைவத் தமிழர்களின் முதன்மை ஆதீனமாக விளங்கி, திருகோணமலையில் சைவத்தையும் தமிழையும் மேம்படுத்தவும் 

தமிழர்களின் மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் முனைப்போடு செயற்பட்டு வருகின்ற தென்கயிலை ஆதீன சுவாமி அகத்தியர் அடிகளார் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிமான சம்பவத்தை எமது சபை வன்மையாகக் கண்டிக்கவேண்டும். 

அத்துடன், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாகக் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த பொலிஸாரின் செயலும் கண்டிக்கப்பட வேண்டியது. மேலும், தமிழர் மரபுரிமைச் சின்னங்களை அபகரித்து சிங்கள மயப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் 

தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் செயலையும் இந்தச் சபை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். – எனத் தெரிவித்தார். தவிசாளர் த.நடனேந்திரன், உறுப்பினர்களான எஸ்.துரைலிங்கம், சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று உரையாற்றினர். 

இதனைத் தொடர்ந்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.