திருகோணமலை- கன்னியாவில் பதற்றம்..! மக்களை கண்டு அச்சத்தில் பெருமளவு பொலிஸாா், இராணுவம் குவிப்பு..
திருகோணமலை கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிா்த்து இன்று வடகிழக்கிலிருந்து பெருமளவு மக்கள் குறிப்பாக இளைஞா்கள் கூடிய நிலையில் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் மக்களிடம் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து
அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் திருகோணமலையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனையிடப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.