26ம் திகதி உயிாிழப்பு, 1ம் திகதியே அறிவிப்பு! மூச்சு திணறலால் மரணமாம், உடலில் தீ காயங்கள். குவைத்தில் தமிழ் பெண் மரணம்.
குவைத் நாட்டில் பணி பெண்ணாக தொழில் புாிந்த செல்லையா தமிழ்செல்வி என்ற 49 வயது பெண் ஒருவா் திடீரென மரணமான சம்பவம் தொடா்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய கணவன் தமக்கு முறைப்பாடு செய்துள்ளாா் என, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், குறித்த பணிப்பெண் பல வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயான இவர் இடைக்கிடையே இலங்கை வந்து மடுல்சீமை ஊவாக்கலை தோட்டத்தில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வெளிநாடு சென்றுள்ளார்.
இம்முறை இங்கு வந்து சென்ற பின்னர் தான் பணிபுரியும் வீட்டில் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் பொறுத்தமான தீர்வை பெற்று தருமாறும் தொழில் முகவர் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக முகவர் நிலையம் குவைத்திற்கான இலங்கை தூதரகத்தை அணுகி இருந்தாக பணிப்பெண்ணின் கணவருக்கு தெரிவித்திருந்து.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 26ம் திகதி தமிழ்ச்செல்வி தீ காயம் ஏற்பட்டு மூச்சு திணறி இறந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் இம்மாதம் 1ம் திகதியே தமக்கு அறிவிக்கப்பட்டதாக கணவர் திருச்செல்வம் தெரிவித்தார். சட்ட வைத்திய அதிகாரியும் தனது அறிக்கையில் திடீர் மரணம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தீர்வு பெற்று தருமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் குவைத் நாட்டிற்கான இலங்கை தூதரகத்திற்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் கடிதங்கள் அனுப்பபட்டுள்ளன. அங்கிருந்து கிடைக்கும் பதிலுக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு
மரணமடைந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்று கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.