தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீா்க்க நடவடிக்கை.. ஆளுநா் கூறுகிறாா்..
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளை தீா்க்க 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.
இதன் ஓர் அங்கமாக, சுமார் 5 வருடங்களில் எமது அரசாங்கத்தினால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள காணிகளில் இதுவரை 3,953 ஏக்கர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்தார்.
அது பாரிய அளவிலான முன்னேற்றம் எனவும், அவ்வாறான காணி விடுவிப்பு தொடர்பிலும் மிக கூடிய அளவு பங்களிப்புகள் அரசாங்கத்திடமும் காணப்படுகின்றது என ஆளுநர் தெரிவித்தார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமைகத்திற்கு கீழ் உட்பட்ட 27.4 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மக்கள் காணியும் மற்றும் பலாலி வடக்கு தமிழ் கலவன் பாடசாலையும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட மேலகதிக அரசாங்க அதிபர் காணி செ.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன், யாழ். பாதுகாப்பு படைத் தலைமைக கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டிராட்சி ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பகுதி காணிகளை மக்களுக்கு கையளித்தனர்.