ஐ.தே.கட்சி ஆட்சியை கவிழ்த்துவிட்டு நாங்கள் என்ன செய்வது..? கேட்பது சம்மந்தன்..
ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிராக வாக்களிக்கும் படி எங்களை கேட்கிறாா்கள், என் வீட்டின் முன்னால் போராட்டம் நடத்துகிறாா்கள். ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு என்ன செய்வது?
என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசு கடந்த அரசைவிடக் கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஆட்சியின்போது இருந்ததை விட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை. இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம்.
எனவே, நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி இன்று திருகோணமலையில் என் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தது. எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசு இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பொது எதிரணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வடக்கு மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு
என்ன என்பதை முதலில் முன்வைக்க வேண்டும். அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாங்கள் சரியான தீர்மானம் எடுப்போம் - என்றார்.