செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரம்..! இன்று வவுனியா மேல் நீதிமன்றில் இருதரப்பு விவாதம்..
முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரம் தொடா்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இரு தரப்பு வாதங்களும் இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படுகின்றது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்குச் சென்ற மக்களோடு
தேரர் முரண்பட்ட நிலையில் குறித்த இடத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து, முல்லைத்தீவு பொலிஸாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அங்கு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில்,
குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை. இரு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும்,
அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால்
வவுனியா மேல் நீதிமன்றில் முறையிடப்பட்டது. அதற்கமைவாக இன்று வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.