6 லட்சம் சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா 500 ரூபா கொள்ளை..! நாடாளுமன்றில் மழுப்பிய அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
6 லட்சம் சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா 500 ரூபா கொள்ளை..! நாடாளுமன்றில் மழுப்பிய அமைச்சர்..

சமுர்த்தி நிகழ்வொன்றின்போது ரீசேர்ட்டுகள் மற்றும்  சுவரொட்டிகளுக்காக செலவிடப்பட்டுள்ள  3,000 இலட்சம் ரூபா பணம்   சமுர்த்தி பயனாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதா என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் 

நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப்  பதிலளித்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, மழுப்பல் போக்கில் பதில் வழங்கியதால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அனுரகுமார திஸாநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த சில கேள்விகளுக்கு அமைச்சர் தெளிவான பதில்களை வழங்கியிருக்கவில்லை.  இவ்வேளையில் எழுந்த அனுரகுமார திஸாநாயக்க,  

6 இலட்சம் சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து ஒருவருக்கு தலா 500 ரூபா என்ற அடிப்படையில் வெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ரீசேர்ட்டுகளுக்காகவும் சுவரொட்டிகளுக்காகவும் இவ்வாறாகப் பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

3,000 இலட்சம் ரூபா பணத்தை இவ்வாறாக செலவழித்தமையை இந்தப் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்கின்றதா? அத்துடன், ரீசேர்ட் தைப்பதற்கான பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தீர்கள் எனவும் கேட்கின்றேன். 

வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவிலிருந்து 500 ரூபாவை வெட்டியெடுத்து ரீசேர்ட்டுகளுக்காகவும் சுவரொட்டிகளுக்காகவும் செலவிடப்பட்டுள்ளதை அனுமதிக்கின்றீர்களா என இந்தச் சபையில் கேட்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் தயா கமகே தெரிவிக்கையில்;

ஏழை மக்கள் தொடர்பாகக் கதைக்கும் அனுரகுமார, ஏழை மக்களுக்கு இவ்வாறாக 450 ரூபா பெறுமதியான ரீசேர்ட்டுகளை வழங்க  நடவடிக்கையெடுத்தமை தொடர்பாகக் கருத்துக் கூறியமை தொடர்பில்  நாங்கள் கவலையடைகின்றோம். 

அத்துடன், தயா எப்ரல் நிறுவனத்திற்கு 9 ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால், இவை ஒன்றில் கூட  இந்த ரீசேர்ட்டுகள் தைக்கப்படவில்லையென்பதையும் நான் கூறிக்கொள்கின்றேன்.

இதேவேளை 500 ரூபாவை யாரிடமிருந்தும் நாங்கள் வெட்டி எடுக்கவில்லை. சமுர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்கும் பணம் அவ்வாறே கிடைக்கின்றது. நாங்கள் குறித்த பணத்தை திறைசேரியிலிருந்தோ,  சமுர்த்தி கொடுப்பனவிலிருந்தோ பெற்றுக்கொள்ளவில்லை.  

கடந்த ஆட்சிக் காலத்தில் சமுர்த்தியில் கொள்ளையடித்தது போன்று நாங்கள் செய்யவில்லை என்றார். இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. கூறுகையில்;

நீங்கள் திறைசேரியிலிருந்தோ, சமுர்த்தி கொடுப்பனவிலிருந்தோ  3,000 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றால் இவ்வாறாக செலவிடப்பட்ட தொகையை  நீங்கள் எவ்வாறு தேடியுள்ளீர்கள் என்பதை இந்தப் பாராளுமன்றத்தில் கூறுங்கள்  என்றார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பதிலளித்த அமைச்சர் தயா கமகே;

3,000 இலட்சம் ரூபாவை நீங்கள் பெரிய தொகையாகக் கூறினாலும்  நாங்கள் அதற்காக 3,000 கோடி ரூபாவை நாட்டுக்கு ஈட்டிக்கொடுக்கின்றோம். வருமானத்தை நாங்கள் இரண்டு மடங்காக அதிகரிப்போம்  என்றார்.

இந்நிலையில், அது தொடர்பாக கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க மத்திய வங்கிக் கொள்ளையை பார்க்கவும் 

இந்தத் தொகை சிறியதாகத்தான் தெரியும். ஆனால், நான் கேட்கும் கேள்விக்கு அமைச்சர் சரியான பதிலை வழங்கவேண்டும் என்றார்.

இவ்வேளையில் அமைச்சர் தொடர்ந்தும் மழுப்பல் போக்கில் பதில்களை வழங்கிவந்த நிலையில், எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் அவரிடம் 

அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விகளையே கேட்டனர். எதிர்க்கட்சி பிரதம கொரடாவான மகிந்த அமரவீர, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கேள்விகளை எழுப்பினர்

இதன்போது பதிலளித்த அமைச்சர் தயா கமகே,

நாங்கள் இதற்காக அரசாங்கத்தின் பணத்தைச் செலவழிக்கவுமில்லை, திறைசேரியிலிருந்து ஒரு சதத்தையேனும் பெற்றுக்கொள்ளவுமில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி எம்.பியான விமல் வீரவன்ச கூறுகையில்,

நீங்கள் சமுர்த்தியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளவுமில்லை, திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ளவுமில்லை என்று கூறுகின்றீர்கள். அப்படியென்றால், 

எவ்வாறு அந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை மற்றைய அமைச்சர்களுக்கும் தெளிவுபடுத்தினால் அவர்களும் அப்படிச் செய்வார்கள்தானே என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு