SuperTopAds

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ தலைமை அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’!

ஆசிரியர் - Admin
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ தலைமை அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மென்லோ பார்க் என்ற இடத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். 

அந்த வகையில், நேற்று முன்தினம் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சல் ஒன்றை ஊழியர்கள் பிரித்து பார்த்தபோது, அதில் நச்சு ரசாயனமான ‘சரின்’ இருப்பது தெரியவந்தது. சரின் என்பது நரம்பு மண்டலத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சு அமிலம் ஆகும். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், சரின் இருப்பதாகக் கூறப்படும் பார்சலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக ரசாயன பார்சலை கையாண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்ததில், அவர்களுக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பேஸ்புக் அலுவலகத்துக்கு பார்சலில் நச்சு ரசாயனத்தை அனுப்பியது யார்? அதன் பின்னணி என்ன என்பது குறித்து மத்திய புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.