5ஜி சோதனை ஓட்டங்களில் சீன நிறுவனங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்!
5ஜி சோதனை ஓட்டங்களில் சீன நிறுவனங்களை விலக்கி வைக்க வேண்டும் என அதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும்போது பல பில்லியன் டாலர் வர்த்தகம் கொழிக்கும் என்பதால், நோக்கியா, எரிக்சன், சாம்சங், சிஸ்கோ, ஹூவாவேய் போன்ற நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. சீனாவிற்கு அடுத்து மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் 5ஜி சோதனை ஓட்டங்களிலும் இந்நிறுவனங்கள் பங்கெடுக்க உள்ளன.
இந்நிலையில், 5ஜி சோதனை ஓட்டங்களில் சீன நிறுவனமான ஹூவாவேய் பங்கெடுக்க அனுமதிக்கக் கூடாது என, 5ஜி உயர்நிலைக் குழுவின் தலைவரும், தலைமை அறிவியல் ஆலோசகருமான விஜய் ராகவன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி தொழில்நுட்ப சோதனை ஓட்டங்கள் தொடர்பான துணைக் குழுவின் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இதில் உளவுத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் 5ஜி சோதனை ஓட்டங்களில் ஹூவாவேய் நிறுவனத்தை அனுமதிக்காலாமா கூடாதா என்பதில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில்தான், 5ஜி உயர்நிலைக் குழுவின் தலைவர் விஜய் ராகவன், ஹூவாவேய் நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். சீனாவைப் பொறுத்தவரை சாதக-பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த பிறகே, முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம், சீன நிறுவனம் உள்ளிட்ட அனைவரையும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என வெளியுறவுத் துறை வாதிட்டுள்ளது. சீன ராணுவத்துடனும், அந்நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஹூவாவேய் நிறுவனம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, ஹூவாவேய் நிறுவனத்தை முடக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
5ஜி தொழில்நுட்பங்களில் ஹூவாவேய் நிறுவனத்தை விலக்கி வைக்குமாறு நட்பு நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அண்மையில் ஒசாகாவில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.