அக்டோபர் மாதத்திற்கு பின் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்?
அக்டோபருக்குப் பின் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிதிச் சூழலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆளாகும் எனக் கூறப்படுகிறது.
பெரும் நிர்வாகச் செலவு, வர்த்தகத்தில் லாபமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. ஏற்கெனவே ஏர் இந்தியாவின் பெரும்பாலான பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இதற்கு ஊழியர்கள் உள்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உத்தரவாதப் பத்திரம் அளித்தது. அதில் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மீதமுள்ளதாக சொல்லப்படும் நிலையில், மாதந்தோறும் சம்பளச் செலவு மட்டுமே 300 கோடி ரூபாய் ஆவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எரிபொருள் நிறுவனங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் வழங்க வேண்டியது எனக் கணக்கிட்டால் வரும் அக்டோபருக்குப் பின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஏர் இந்தியாவிடம் நிதி இருக்காது என சொல்லப்படுகிறது.
ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், மத்திய பட்ஜெட்டில் ஏர் இந்தியா கடனில் இருந்து மீள கூடுதல் நிதி கோரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.