SuperTopAds

பாரதிய ஜனதா கட்சியினருக்கு மோடி எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
பாரதிய ஜனதா கட்சியினருக்கு மோடி எச்சரிக்கை!

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. கடந்த வாரம் இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் இந்தூர்-3 தொகுதி எம்.எல்.ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா தனது ஆதரவாளர்களுடன் வந்து இடிக்கும் பணியை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என தடுத்தார்.

 அப்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கோபமடைந்த ஆகாஷ் அதிகாரியை அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கு இருந்த சக அதிகாரிகளையும் தாக்கினர். போலீசார் தடுக்க முயன்றபோது தொடர்ந்து அவர் தாக்குதலில் ஈடுபட்டார். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய ஆகாஷ் விஜய்வர்கியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது, பொதுப் பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நகராட்சி அலுவலரை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியாவை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று ஜாமினில் விடுதலையான அவருக்கு உள்ளூர் மக்கள் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதேபோல், சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு சார்பில் மரம் நடும் விழாவில் வனத்துறையினர் பங்கேற்றனர். அப்போது அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் ஆளும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி பிரமுகருமான கோனேரு கண்ணப்பாவின் சகோதரரான கோனேரு கிருஷ்ணா என்பவர் தலைமையில் சிலர் கும்பலாக அங்கு வந்தனர். வனத்துறையினர் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பெண் காவலர் மயங்கி விழுந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று பாஜக எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவும் பங்கேற்றார். அப்போது எந்த சம்பவத்தையும் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, ‘யாராக இருந்தாலும், யாருடைய மகனாக இருந்தாலும் அராஜகத்தையும் ஒழுங்கீனத்தையும் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது’ என எச்சரித்தார்.

இதைப்போன்ற செயல்கள் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குவதால் ஏற்புடையதாக இருக்க முடியாது. யாராவது தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவமும் அவர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.