SuperTopAds

மனைவி 30 ரூபாய் கேட்டதால் தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்!

ஆசிரியர் - Admin
மனைவி 30 ரூபாய் கேட்டதால் தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்!

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேறியது. 

மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆனது. இதனால் நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில், முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,நொய்டாவில் ஒருவர் முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். கிரேட்டர் நொய்டாவின் நசியாபதி பகுதியைச் சேர்ந்தவர் ஜைனாப் (30). இவரது கணவர் சபீர். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. ஜைனாப் கடந்த சனிக்கிழமை, மளிகை சாமான்கள் வாங்குவதற்காக ரூ.30 கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான அவர் ஜைனாப்பை தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தலாக் என மூன்று முறை சத்தமாக கூறி விவாகரத்து செய்துவிட்டதாக சபீர் கூறி இருக்கிறார். ஜைனாப் தனது தந்தைக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி இருக்கிறார். அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து ஜைனாப்பின் தந்தை கூறுகையில், ‘திருமணம் செய்ததில் இருந்தே சபீர் வீட்டில் வரதட்சணை கேட்டு வருகின்றனர்.

என் மகளை அடிக்கடி தாக்குவார்கள். நான் கேட்கச் சென்றால், சபீர் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுவார். எப்போதும் அடிப்பார்தான். இப்போதும் அப்படிதான் என நினைத்து வீட்டிற்கு வந்தேன்.

என் மகளை அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் தலாக் என சத்தமாக 3 முறை கூறி விவாகரத்து செய்ததாக கூறினார். என் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தேன். பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்’ என கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக சபீரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.