SuperTopAds

ராகுல் காந்திக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா!

ஆசிரியர் - Admin
ராகுல் காந்திக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா!

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சிக்கு தனது குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும்படியும் கூறினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தனது முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்று ராகுல் காந்தி 2 நாட்கள் முன்பு திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், அகில இந்திய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகிறார்கள்.

கட்சியின் தோல்விக்கு அவர் மட்டுமே பொறுப்பு அல்ல என ராகுல் காந்திக்கு ஆதரவாக அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகிறார்கள். பலர் கட்சி தலைமைக்கு தங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியுள்ளனர். மேலும் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களின் ராஜினாமா பற்றி அறிவித்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநில பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான தீபக் பாபரியா, கோவா மாநில தலைவர் கிரிஷ் சோடான்கர், டெல்லி மாநில செயல் தலைவர் ராஜேஷ் லிலோதியா, தெலுங்கானா மாநில செயல் தலைவர் பொன்னம் பிரபாகர் உள்பட பல மாநில தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதற்கு பொறுப்பேற்று அந்த மாநில தலைவர் ராஜ்பாப்பர் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

உத்தரபிரதேச மாநில மூத்த துணைத்தலைவர் ரஞ்ஜித்சிங் ஜுதேவ், பொதுச்செயலாளர் ஆராதனா மிஸ்ரா, துணைத்தலைவர் ஆர்.பி.திரிபாதி, மாநில நிர்வாக குழுவின் 13 உறுப்பினர்கள் உள்பட கடந்த 2 நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதங்களை அனுப்பி உள்ளனர்.