தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்!

ஆசிரியர் - Admin
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்!

தண்ணீரை பாதுகாப்பதே நமது காலத்தின் கட்டாயமாகும் என்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எம்பிக்கள் அனைவரும் தண்ணீரை பாதுகாப்பதில் ஈடுபட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, வாஜ்பாய் போன்ற மூத்த தலைவர்களை தாம் புறக்கணிப்பதாக கூறப்படும் புகார்களுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்கள் சொந்த தலைவர்களை பாராட்டினார்களா என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சியினர் ஒரு குடும்பத்தை தாண்டி எதையும் யோசித்ததில்லை என்றும் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி போன்றவர்களைக் கூட காங்கிரஸ் கட்சி புகழ்ந்தது கிடையாது என்றும் மோடி சாடினார். முத்தலாக் தடுப்பு சட்டமசோதா இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது என்று விளக்கம் அளித்த பிரதமர் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பைக் கைவிட வலியுறுத்தினார். இது பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் மசோதாதான் இதனை மதரீதியாக பார்க்க வேண்டியதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே இருப்பதை அவர் நினைவுபடுத்தினார். இது எமர்ஜன்சி காலம் அல்ல என்பதால் ஜாமீனில் நடமாடுவதை எதிர்க்கட்சித் தலைவர்கள் நன்றாக அனுபவிக்கட்டும் என்று மோடி குறிப்பிட்டார். அவசரநிலை பிரகடனத்தின்போது நீதிமன்றங்கள் கூட முடக்கப்பட்டு ஜனநாயகம் சிறையில் தள்ளப்பட்டதாக சாடினார். அக்காலம் ஜனநாயகத்தின் மீது தீராத கறைபடிந்த காலம் என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

வருங்காலத்திற்காக தண்ணீரை அனைத்து வழிகளிலும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, எம்பிக்கள் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். ஒவ்வொரு வீட்டிற்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜல் சக்தி என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். தண்ணீரை சிக்கனமாக செலவழித்து பாதுகாக்குமாறு மக்களிடமும் அவர் கேட்டுக் கொண்டார். தண்ணீர் பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்படுவதே ஏழை மக்கள்தான் என்றும் மோடி கூறினார்.