விழுப்புரத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை!
விழுப்புரத்தில் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணுக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து இரவு 9 மணியளவில் வீடு திரும்பும்போது அவரை, அவரது நண்பர் அருள்ஜோதி என்பவர் விநாயகபுரம் ரயில்வே பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரும், அவரது நண்பர்கள் என மொத்தம் 5 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரை ரயில்வே தண்டவாளத்தில் இழுத்துச் சென்றதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தண்டவாளம் அருகே பலத்த காயங்களுடன் கிடந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அருள்ஜோதி உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.