SuperTopAds

அடுத்த 12 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் புயல்!

ஆசிரியர் - Admin
அடுத்த 12 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் புயல்!

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 30ஆம் தேதி மாலையில் தீவிர புயலாக வடதமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு தென் கிழக்கே ஆயிரத்து 210 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும், 30ஆம் தேதி மாலை தீவிர புயலாக வட தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழக துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் ஆழ் கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.