ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொலிஸார் விடிய விடிய சோதனை!
ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட இருப்பதாகவும் மிரட்டல் விடுத்த நபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 5.35 மணியளவில் பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் அழைத்த நபர், தென் மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறவுள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை அடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநில காவல்துறைக்கு கர்நாடக டிஜிபி அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை அனுப்பப்பட்டது. தமிழகம் முழுவதும் உஷாராக இருக்குமாறு தமிழக டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு தலைமைச் செயலரிடம் இருந்து அவசர செய்தி அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சேலம் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். நடைமேடைகளில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
பயணிகள் சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சேலம் பேருந்து நிலையம், விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரரும், லாரி ஓட்டுனருமான சுந்தரமூர்த்தி என்ற நபரை பெங்களூரு ஊரக போலீசார் கைது செய்துள்ளனர். வெடிகுண்டு மற்றும் தீவிரவாதத் தாக்குதல் மிரட்டல் வெறும் போலி என பெங்களூரு ஊரக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.