ஜெட்ஏர்வேசின் எஞ்சிய பங்குகளை அடமானம் வைக்க முடிவு!
கடன் சுமையில் மூழ்கியிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கரைசேர்க்க தன்வசம் இருக்கும் எஞ்சிய 20 சதவீத பங்குகளையும் அடமானம் வைக்க அதன் நிறுவனர் நரேஷ்கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நரேஷ் கோயல் வசம் உள்ள 51 சதவீத பங்குகளில் 31 சதவீதத்தை ஏற்கனவே அடமானம் வைத்து விட்டார். எஞ்சியிருக்கும் 20 சதவீத பங்குகளை அடமானமாக வைத்துக் கொண்டு, உடனடியாக ஆயிரத்து 500 கோடி ரூபாயை அவசர நிதியாக வழங்க வேண்டும் என்று கடன் வழங்கிய வங்கிகளிடம் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு வங்கிகள் தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையே ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ள இரண்டாவது பெரிய பங்குதாரரான அபுதாபியை சேர்ந்த எடிஹட் விமான நிறுவனம், கூடுதலாக முதலீடு செய்யலாமா என்பது குறித்து நிர்வாக குழுவில் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறது.