SuperTopAds

முதல்முறை வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு!

ஆசிரியர் - Admin
முதல்முறை வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு!

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 7 லட்சத்து 2,189 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 63 சதவீதம் பேர் வாக்களித்தனர். 

பழங்குடி இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தனித் தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு சுமராகவே உள்ளது. எனவே இந்த தடவை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மிசோரமில் இந்த தடவை 83 வயது காங்கிரஸ் வேட்பாளர் ரூபா உள்பட 6 பேர் களத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு (2018) மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா முயற்சிகளில் ஈடுபட்டார்.

இதற்காக அவர் இளைஞர்களுக்கும், முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கும் செல்பி போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.