SuperTopAds

"நீட் தேர்வை ரத்து செய்வதாக மக்களை ஏமாற்றுகிறார்கள்"- சீமான் குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Admin

திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழர்கள் உரிமையை இழந்து அடிமையாக வாழவைப்பதற்காகவே இங்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏழை விவசாயிகளின் சின்னம் இரட்டை இலை என்றும், உதயசூரியன் என்றும் திராவிட கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறது. விவசாயியை ஏழையாக மாற்றிய கட்சிகள் இவை. அந்த விவசாயியை சின்னமாக கொண்டு நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

 50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இதுவரை செய்த சாதனையை சொல்ல முடியுமா? 5 ஆண்டுகளாக ஆட்சியை நிறைவு செய்த மோடி தமிழர்களுக்கு செய்த சாதனையை சொல்ல முடியுமா?. இங்குள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நீட் தேர்வை ரத்து செய்வோம், கச்சத்தீவை மீட்போம் என்று உறுதி அளிக்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தியோ, மோடியோ அவர்கள் வாயால் இதை சொல்வார்களா?. சொல்ல மாட்டார்கள். இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாட்டை கூறுபோட்டு விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறார்கள்.

தமிழர்களின் உரிமையை பறிக்கும் வேலையைத்தான் காங்கிரசும், பா.ஜனதாவும் செய்து வருகிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு, வாழ்வுக்கு இவர்கள் எதுவும் செய்தார்களா?. இதை மானமுள்ள தமிழ் மக்கள் நினைத்து பார்த்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழர் இனத்துக்காக வாழ்ந்த பிரபாகரனை நாங்கள் சுமந்து நிற்கிறோம். புலிக்கொடியை நாம் தமிழர் கட்சியின் கொடியாக கொண்டுள்ளோம். சோழ மன்னன் கடல் கடந்து ஆண்டான் என்பதை நினைவு கூறும் வகையில் புலியை கொடியாக கொண்டிருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சி என்பது மாற்று அரசியல் புரட்சி. மாற்றம் என்பதே மானுட தத்துவம். மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நாங்கள் செய்கிறோம். இந்த சமூகம் குற்றம் நிறைந்ததாக மாறி வருகிறது. கல்வி முறையில் மாற்றம் அவசியம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரேநாள் இரவில் கொண்டு வந்ததை நாம் மறந்து விடக்கூடாது. மறதி என்பது தேசத்தின் நோய். அதனால் தான் பழையவற்றை நினைவுபடுத்தும் வேலையை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது.

திருடர்கள் திருட வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி திருட விடாமல் செய்பவனே காவலாளி. ஆனால் திருடிய பின்பு துரத்திச்சென்று தாக்குவது காவலாளி அல்ல. மோடி தன்னை காவலாளி என்று கூறுகிறார். ஆனால் புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு துரத்தி தாக்குவதா? காவலாளியின் வேலை. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து, மின்உற்பத்தி அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார்கள். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் முதலாளிகளுக்கு விற்று விட்டால் மக்கள் எப்படி சிறப்பாக வாழ முடியும். இங்குள்ள பொருளாதார கொள்கையே தவறு. வெளிநாட்டு முதலாளிகள் தங்கள் சரக்குகளை விற்பனை செய்யும் வகையில் இந்திய நாட்டை வர்த்தக சந்தையாக மாற்றிவிட்டார்கள்.

காங்கிரசும், பா.ஜனதாவும் இதைத்தான் செய்து வருகிறது. பொதுவுடைமை கருத்துகளை சொன்ன கம்யூனிஸ்டுகள் ஒரு மாநிலத்தில் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்கிறது. மற்றொரு மாநிலத்தில் ராகுல் காந்தியை எதிர்த்து மாற்று கட்சியாக நிற்கிறார்கள். உலகம் முழுவதும் ஒரே கொள்கையை கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி. நீர்மேலாண்மை பற்றி எந்த கட்சியும் திட்டம் வகுத்தது உண்டா?. 130 கோடி மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க இவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள். விரைவில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுவார்கள். நாம் தமிழர் கட்சி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் வகுத்துள்ளது. விவசாயத்தை அரசு வேலையாக்கும்.

18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. 37 அ.தி.மு.க. எம்.பி.க்கள் மத்தியில் அங்கம்வகித்தார்கள். தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுக்காதவர்களா, இனியும் குரல் கொடுக்கப்போகிறார்கள். விவசாயத்தை மறந்த நாடுகள் உணவுத்தேவைக்காக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுத்து வருகிறது. அதுபோன்ற நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறோம். ஓட்டுக்காக நாங்கள் வரவில்லை. இந்த நாட்டை காக்கவே உங்களிடம் வந்து ஓட்டு கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.