ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தினால் மஹிந்த- மைத்திரி அணிகளுக்கிடையில் முறுகல்!
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே எனக் கூறியிருந்தார். அத்தோடு இதுவே தமது நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார்.
தற்போது பேசப்படும் அரசியல் கூட்டணி, மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கானதல்லவென, மற்றுமொரு நிகழ்வில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார்.
இந்நிலையில் மைத்திரி தரப்புக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் இருதரப்பிற்குமிடையே கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் தோல்வி ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் ஏற்கனவே பொதுஜன பெரமுன கட்சிக்குள் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.