தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்த இடமளிக்கக் கூடாது! - மாவை

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்த இடமளிக்கக் கூடாது! - மாவை

தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை மீள வலியுறுத்தும் வகையில் இம்முறை ஐ.நா. ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையை வரவேற்பதாக மாவை மேலும் குறிப்பிட்டார்.

ஆனால், சர்வதேச தலையீட்டை ஏற்கமாட்டோம் என்றும் எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், ஏனைய காணிகளையும் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்கவில்லை. பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை. உண்மையை கண்டறியும் குழு செயற்படவில்லை. இந்நிலையில், உண்மை கண்டறியப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் எடுக்கும் தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் மனித புதைகுழி பல நூற்றாண்டுகள் பழைமையானவை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட மாவை, அவை மீள பரிசோதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Radio
×