இலங்கைக்கு கடிவாளம் போடுவது எப்படி? - ஆராயவுள்ள கூட்டமைப்பு.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசு வெளியேறாத வகையில், அதன் வாக்குறுதிகளை குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றக் கூடியதாகத் தீர்மானம் எப்படி அமையவேண்டும் என்பது பற்றி நாங்கள் ஆராய இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
'இலங்கை தொடர்பில் கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை உரிய வகையில் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இலங்கைக்கு 2017ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
அது எங்களின் தீர்மானம் அல்ல. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தீர்மானம். அவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைகின்றது. இந்த நிலையில் பிரிட்டன் மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கித் தீர்மான வரைபை முன்வைத்துள்ளது. அந்தத் தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
இலங்கை அரசு ஒரு பக்கம், ஐ.நா.தீர்மானத்திலிருந்து வெளியேற நினைக்கின்றது. அதனையும் அனுமதிக்க முடியாது. காலஅவகாசமும் வழங்க முடியாது. இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்காமல், தீர்மானங்களை எப்படி நிறைவேற்ற முடியும் என்பது தொடர்பில், எங்கள் தொடர்பான தீர்மானம் எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பில், நாங்கள் ஆராய இருக்கின்றோம் என்றார்.