SuperTopAds

புதிய அரசியலமைப்பு வரைபை தமிழர் தரப்பு பரிசீலிக்க வேண்டும்: சிவஞானம் அதிரடி!

ஆசிரியர் - Admin
புதிய அரசியலமைப்பு வரைபை தமிழர் தரப்பு பரிசீலிக்க வேண்டும்: சிவஞானம் அதிரடி!

புதிய அரசியலமைப்பு வரைபில் சாதகமான பல அம்சங்களும், பாதகமான பல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாதகமான விடயங்களை நாங்கள் நிராகரிக்கலாம். ஆனபோதும் புதிய அரசியலமைப்பு வரைபைத் தமிழர் தரப்பு ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதைத் தவிர்த்துப் பரிசீலிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே .சிவஞானம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

“ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்” எனும் தலைப்பிலான விசேட அரசியல் கருத்தரங்கு நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (21-01-2019) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை அமைச்சுக்கள் தோன்றுவதற்கு மிகப் பெரிய காரணமிருக்கின்றது. எங்களுடைய அமைச்சர்கள் அமைச்சுக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் காணப்படவில்லை. அதிகாரிகளுடைய நிலைப்பாடுகளை நான் என் கண்களுடாக நேரடியாகப் பார்க்கின்றேன்.அதிகாரிகள் தாங்கள் நினைத்தது போன்று தான் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆனால், புதிய அரசியல் வரைபில் மாகாண சபையினுடைய செயலாளர்கள் மாகாண அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் பணியாற்ற வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான வரைபை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் கருத்துக்களுடன் நான் உடன்படவில்லை. புதிய அரசியலமைப்பு வரைபில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன.

சில சொற்களில் மாத்திரம் நாங்கள் தொங்கிக் கொண்டிருக்காமல் புதிய அரசியலமைப்பு வரைபிலுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் புதிய அரசியலமைப்பு வரைபிற்கெதிராக முன்வைக்கும் காரணங்களைத் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் உள்வாங்கி எங்களுக்கெதிராக செயற்படுகிறார்கள். இதனை அடிப்படையாக வைத்து நோக்கும் போது நாங்களே குற்றவாளிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.