SuperTopAds

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் - பிள்ளைகளுக்காக போலியாக நடித்து யாசகம் பெற்ற பெண்!

ஆசிரியர் - Admin
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் - பிள்ளைகளுக்காக போலியாக நடித்து யாசகம் பெற்ற பெண்!

வவுனியா, மன்னார் வீதியில் போலியாக நடித்து வீதியில் சென்றவர்களிடம் யாசகம் கேட்ட பெண் ஒருவர், ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு ஆலோசனைகள் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். 

வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை குறித்த பெண் நடக்க முடியாதவராகவும், வாய் பேச முயாதவராகவும் தன்னை பாவனை செய்து வீதியில் இருந்து யாசகம் பெற்றுள்ளார். இதனை அவதானித்த பலர் மனம் நெகிழ்ந்து உதவி செய்துள்ளனர். 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் ஆகியோர் குறித்த பெண்ணுக்கு சக்கர நாற்காலியை வழங்கினர்.

ஆனால், குறித்த பெண் தனக்கு அது வேண்டாம் எனவும், காசு தான் வேண்டும் எனவும் அடம் பிடித்ததுடன், அவ்வாறே செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சமூக சேவைத் திணக்கள உத்தியோகத்தர்களும், ஊடகவியாளர்களும் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், வீதியால் சென்ற சுகாதார அமைச்சின் வாகனம் ஒன்றில் குறித்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலைக்கு சென்ற அவர்கள் குறித்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்ததையடுத்து அந்தப் பெண் உண்மைகளை கூறியுள்ளார். தான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும், யாசகம் கேட்பதற்காக பேருந்தில் வவுனியா வந்ததாகவும் தெரிவித்துடன், ஒரு காலில் பிறப்பில் இருந்து சிறு குறைப்பாடு உள்ள போதும் நடந்து திரியக் கூடியவர் எனவும் வாய் பேசுபவர் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் கடல் தொழில் செய்பவர். அவர் இறந்து 6 வருடங்கள் சென்று விட்டது எனவும், தனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளை திருமணம் செய்து விட்டார். ஏனைய பிள்ளைகளுக்காகவே தான் இவ்வாறு யாசகம் பெறுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளதுடன், இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண் வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்கிய சமூக சேவைத் திணைக்களமும், ஊடகவியலாளர்களும் குறித்த பெண்ணை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.