மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உணவு தவிா்ப்பு போராட்டத்தை நடாத்திய பெண் நேற்று இரவுடன் தனது போராட்டத்தை நிறுத்தினாா்..
மட்டக்களப்பு- வவுணதீவு துப்பாக்கிசூடு சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்டவாின் மனைவி நேற்று கா லை ஆரம்பித்திருந்த உணவு தவிா்ப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
வவுணதீவில் கடந்த 30ஆம் திகதி பொலிஸார் இருவர் சுட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவரை விடுதலை செய்யுமாறு கோரி,
குறித்த பெண் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று காலை ஆரம்பித்திருந்தார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும்
சி.இராஜகுமாரனின் மனைவியே (செல்வராணி) போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் அந்த தமிழ் பெண் கூறுகையில்,
எனது கணவர் கைது செய்யப்பட்டு 18 தினங்களை கடந்துள்ள நிலையிலும் அவர் இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை.
தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எனது கணவர் எந்த குற்றமும் செய்யவில்லை.
அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் போராட்டத்தை மேற்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி டி.ஹகவத்துற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது பொலிஸார், கைக்குழந்தை உட்பட ஐந்து வயதுக்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை வீதியில் போட்டு போராடுவது குறித்த குழந்தைகளின் உரிமையினை மீறும் செயல்.
அத்துடன் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமானால் அதற்கான பொறுப்பினை தாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டவர் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விசாரணை நிறைவடைந்ததும் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.
அவர் எந்த குற்றமும் செய்திருக்காவிட்டால் விடுதலை செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது தனது உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவு செய்வதாகவும், ஆனால் தனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அவ்வாறு செய்யாதுவிட்டால் வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்படுவேன் எனவும் குறித்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதன் பின்னர் அந்த பெண்ணும், குழந்தைகளும் மட்டக்களப்பு மாநகரசபையின் வாகனத்தில் அவர்களின் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.