கருணாவுக்கும் வவுணதீவுக்கும் என்ன சம்மந்தம்..?
நேற்று 29ம் திகதி இரவு மட்டக்களப்பு வவுனதீவு சோதனைச்சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்ட சம்பவமானது இலங்கை முழுவதும் மிகுந்த பரபரப்புக்குள்ளாகிவருகின்றது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் பிரசன்ன, டினேஸ் என்ற இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்தப் படுகொலைகளை கேணல் கருணா என்ற வினாயகமூர்த்தி முரளிதரனே மேற்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருணா இந்தக் குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்திருந்தார். நளின் பண்டார பைத்தியக்காரத்தனமாக கூறுகிறார் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்திற்கும் கருணாவுக்கும் இடையில் சம்பந்தமுள்ளதா இந்தப் படுகொலையை கருணாதான் செய்தாரா என்று பார்ப்பதைக் கடந்துஇ கருணாவுக்கும் வவுணதீவுக்கும் இடையேயான தொடர்புகளைப் பார்ப்பது பொருத்தம் என்று நினைக்கின்றோம்.
கருணாவைப் பொறுத்தவரை வவுனதீவு என்பது மிகவும் சென்டிமென்டான ஒரு இடம்.
கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதிப் பொறுப்பை 1987ம் ஆண்டு கருணா ஏற்றிருந்தார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை பொறுப்பேற்று சுமார் 10 வருடங்களின் பின்னரே கருணா தலைமையில் கிழக்கில் முதலாவது மரபுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பின் முதலாவது மரபுத் தாக்குதல் வவுனதீவு ராணுவமுகாம் மீதே மேற்கொள்ளப்பட்டது.
1997ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி வவுனதீவு ராணுவ முகாம் மீதான தாக்குதலை கிழக்கில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து கருணா மேற்கொண்டிருந்தார்.
கருணா நேரடியாகத் தலைமைதாங்கிய இந்த வவுணதீவுத் தாக்குதலை கருணாவின் அதிஷ்ட நாளான 7ம் திகதியே திட்டமிட்டிருந்தார். (கருணாவின் பிறந்த தினம் நவெம்பர 7. கருணா தனது தாக்குதல்களை நியூமொரெலஜீ கணக்கீட்டின்படி கூட்டெண் ஏழு அல்லது 7க்கு பொருந்தக் கூடிய கூட்டெண் 2 வருகின்ற தினங்களிலேயே மேற்கொள்வது வளமை)
ஏராளமான ஆயுத தளபாடங்களை வவுனதீவு தாக்குதலில் விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருந்த போதிலும் அந்த தாக்குதலில் 103 போராளிகள் தமது உயிரை தீயாகம் செய்திருந்தார்கள். லெப்.கேணல் பாலேந்திரா லெப்.கேணல் மதனா போன்ற கிழக்கின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
கருணா தலைமையில் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய மரபுத் தாக்குதலான வவுனதீவு முகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு தளதிகளின் ஞபகார்த்தமாக 'பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி' மற்றும் 'மதனா படையணி' போன்றனவற்றை கிழக்கில் உருவாக்கி இருந்தார் கருணா.
வருடா வருடம் இந்த 'வவுனதீவு தாக்குதலை' நினைவுகூர்ந்து வந்த கருணா வவுனதீவை ஒரு 'சென்டிமென்டான' இடமாகவே பார்த்துவந்தார். (2003ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் வவுணதீவு தாக்குதலின் 6ம் ஆண்டு நினைவை தரவை தளத்தில் கருணா மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடுசெய்திருந்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மதனா படையணியின் கொடியை கருணா ஏற்றுவது கருணாவுடன் தொடர்புபடுத்தி குற்றம்சுமத்தப்பட்ட 'சார்ளி' என்ற நிலாவினி ஈகைச்சுடரை ஏற்றுவது லெப்.கேணல் மதனாவின் தாயார் மதனாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவிப்பது மதனா படையணியின் போராளிகள் அணிவகுத்து நிற்பது போன்ற புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
இதேபோன்று கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவினை ஏற்படுத்திஇ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சண்டையிட்டு தோல்வி அடைந்து கிழக்கைவிட்டு வெளியேறிய பின்னர் 'கருணா குழு'வாக மாறி புலிகள் மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது இந்த வவுணதீவு சோதனைச் சாவடியில்தான்.
அத்தோடு கருணாவின் அதிஷ்ட இலக்கமான 'ஏழு' கூட்டெண் வரக்கூடிய தினத்திலேயே அந்தத் தாக்குதல் நடைபெற்றிருந்தது.
25.04.2004 அன்று நள்ளிரவு வவுனதீவு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் வவுணதீவு ஆயித்தியமலை வீதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் காவலரன் மீது கருணா குழுவின் முதலாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலில் 3 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். வவுணதீவு காவல் அரன் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வாகனத்தில் விரைந்த கருணா குழு
உறுப்பினர்கள் பொண்ணாங்கன்னிச்சேனையில் இருந்த விடுதலைப் புலிகளின் மாற்றுத் திறனாளிகள் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டு அங்கு தங்கியிருந்த நான்கு மாற்றுத் திறனாளிகளையும் கொலை செய்திருந்தார்கள். (இந்தச் சம்பவமும் கருணாவின் அதிஷ்ட தினமான 7ம் இலக்க தினத்திலேயே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது)
இப்படியான நிலையில்தான் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌணித்த பின்னரான முதலாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலும் வவுணதீவிலேயே இடம்பெற்றிருப்பதும் அதுவும் நியூமொரோலஜியின்படி கருணாவின் அதிஷ்ட இலக்கமான 'ஏழு'க்கு நெருங்கிய தொடர்புடைய கூட்டு எண் 2 இல் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.