மட்டக்களப்பு- வவுணதீவு துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கும் கருணாவுக்கும் சம்மந்தமா..?
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் பொலிஸ் நிலையத்தில் சேவை செய்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் நேற்று உயிரிழந்தமை தொடர்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக கருணா வெளியிட்ட கருத்தை அடிப்படையாக கொண்டு நளின் பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் என்னை பயமுறுத்த முயற்சிக்கின்றனர். 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் தான் யார் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
கடந்த 3 வருடங்களுக்குள் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகவில்லை எனவும், இந்த கொலைகளுக்கு பின்னால் கருணா இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் பாதுகாப்பு பிரிவு உட்பட அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நளினின் குற்றச்சாட்டு காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.