த.தே.கூட்டமைப்புடன் மீள இணைந்து கொள்ளவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை..
அத்துடன், மக்களாலேதான் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன், மக்கள் கேட்டுக் கொண்டதனால் தான் இன்று பிரதியமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதியமைச்சர் வியாழேந்திரன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாக தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன்.
வெறும் வெற்று பேச்சுகளையும், பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்துச் செயற்பட்டேன். தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.
எனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க விருப்பமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை.
காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கின்றது.
கூட்டமைப்பை சொல்லி மக்கள் முன்சென்று வாக்குக் கேட்க மனச்சாட்சி எனக்கு இடம்கொடுக்கவில்லை. இந்த நிலையில் நான் எவ்வாறு கூட்டமைப்போடு இணைய விரும்புவேன்.
ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு மீண்டும் இணைய முற்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது முற்றிலும் மகா பொய்யான செய்தியாகும். சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ, கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
ஊடக தர்மத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள் இருபக்க நியாயத்தை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் எனப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.